Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 19 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதார மையம் அடிக்கல் நாட்டு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
இந் நிகழ்வினை தொடர்ந்த அவர் பேசியதாவது,
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு முக்கியமான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகை வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த உயர்வு பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்றும், குடும்பச் செலவுகளை சமாளிக்க இது பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், முதியோர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையும் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த உயர்த்தப்பட்ட தொகை பிப்ரவரி மாதம் முதல் முதியோர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் பல துறைகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர், தற்போதைய தேசிய ஜனநாயக அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 4 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதோடு, அரசு துறைகளின் செயல்பாடுகளும் சீராக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்-டாப் திட்டத்தின் கீழ், இன்னும் 15 தினங்களுக்குள் லேப்-டாப்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது மாணவர்கள் டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக அரசு பொறுப்பேற்ற பிறகு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மக்கள் நலனை மையமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி ஒரு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், எதிர்காலத்திலும் மக்களுக்கு தேவையான திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN