ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல் - எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை , 19 ஜனவரி (ஹி.ச.) முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை செய்து பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேர
ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல்  - எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க  நீதிமன்றம் உத்தரவு


சென்னை , 19 ஜனவரி (ஹி.ச.)

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை செய்து பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், கட்சியின் சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் கடந்த 2020 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 19 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானதாகவும், அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை ரத்து செய்து 2024-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கந்தவேலுக்கும் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கே.சி. பழனிசாமி மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி தனபால், பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கும், கந்தவேலுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b