கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா !
கடலூர், 19 ஜனவரி (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதே போல் கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் கடலூர் ம
Temple


கடலூர், 19 ஜனவரி (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதே போல் கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர், தாழங்குடா, மஞ்சக்குப்பம், சின்ன கங்கன்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம், ஞானமேடு, உச்சிமேடு, தாழங்குடா, குண்டுஉப்பலவாடி உள்ளிட்ட கடலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் உற்சவ தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.

இதைக் காண கடலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் புவனகிரி குறிஞ்சிப்பாடி குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் அந்தந்த கிராமங்களில் இருந்து தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு புறப்படும் பகுதிகள் தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படக்கூடிய இடங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து நீர் நிலைகள் உட்பட பல்வேறு இடங்களில் 9 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 20 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் ஊர்க்காவல் படையினர் என 1500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் பொழுது தெய்வங்களை தரிசனம் செய்து ஆற்றில் புனித நீராடி செல்வது வழக்கம்.

ஆனால் தென்பெண்ணை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் பல்வேறு இடங்களில் பெரிய அளவு பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதாலும் ஆற்றுப்பகுதிகள் சேதமடைந்து இருப்பதாலும் பொதுமக்கள் குளிக்கவோ ஆற்றில் இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J