Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச)
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவிகளுக்காக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்களில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சுமார் 71 ஆயிரம் பேர் கொண்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெஸ்சி தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியாக எண் 313 -ன் படி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சிறப்பு ஓய்வூதியம், சத்துணவு ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்ச ரூபாய் பணிக்கொடை என வாக்குறுதி அளித்ததாகவும், அவற்றை நிறைவேற்றக் கோரி போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது, ஆனால் இந்த ஓய்வூதியம் சத்துணவு ஊழியர்களுக்கு பொருந்தாது எனும் நிலையில், ஏற்கனவே வாக்குறுதி அளித்த சிறப்பு ஓய்வூதியத்தை அமல்படுத்த எந்த விதமான அறிவிப்பும் இல்லை என்பதால் கடந்த இரு வாரத்திற்கு முன்பே சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்தனர், ஆனால் கால அவகாசம் கேட்டிருந்த சமூக நலத்துறை, தற்போது மேலும் இரு வாரங்கள் கால அவகாசம் கேட்பதால் இன்று சமூகநலத்துறை இயக்குனருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததாக அச்சங்கத்தினர் அறிவித்தனர்.
நாளை முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சத்துணவு ஊழியர் சங்கத்தினரும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ