Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது.
இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார்.
காலை 9.25 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் செல்வார்.
சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகர் அமர்வார்.
நாளை காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும்.
தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். வரும் ஜனவரி 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார்.
அதன் பிறகு. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால் அதன் பின்னர் நடைபெற்ற மூன்று ஆண்டுகளின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஆளுநர் உரையை பூர்த்தி செய்யாமல் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
இந்த நிலையில் நிலையில், நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக ஆளுநர் ரவி தனது உரையை வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b