தமிழக காங்கிரசில் புதிதாக மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம் - பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) காங்கிரஸ் தலைமை தலைமையில் கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்
தமிழக காங்கிரசில் புதிதாக மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம் -  பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)

காங்கிரஸ் தலைமை தலைமையில் கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கராராக கூறியதாகத் தகவல் வெளியானது.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரவீன் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.

இந்த பட்டியலில் மத்திய சென்னை கிழக்கிற்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கிற்கு கோபி, வட சென்னை கிழக்கிற்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கிற்கு தில்லிபாபு உள்ளிட்ட 71 பேர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஜனவரி 19) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு வாழ்த்துகள். மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும், வாழ்த்துகள்.

இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b