Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b