Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 19 ஜனவரி (ஹி.ச.)
தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மூலம் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையை சேர்ந்த 4-வது படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வீரர்கள், வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் காவல் துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, நாளை முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற உள்ள இந்த ஒத்திகை பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்தந்த வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்த பேரிடர் கால ஒத்திகை பயிற்சியின் முக்கிய பயிற்சியாக திருவேங்கடம் வட்டம், வரகனூர் கிராமத்தில் அமைந்துள்ள சகாரா வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் பேரிடர் காலத்தில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக ஊழியர்களுக்கு ஒத்திகை பயிற்சி வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN