16-வது தாமிரபரணி பாசன பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்
நெல்லை, 19 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டம் வாகைக்குளத்திலும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் குளத்திலும் கருந்தலை அன்றில் பறவையும், நத்தை கொத்தி தின்னும் நாரையும், நீருக்குள் மூழ்கி மீன் பிடிக்கும் நீர்க்காகமும், சாம்பல் நிற நாரையும், வக்கா பறவைய
வருகிற 23-ந் தேதி முதல் 25-ம் தேதி வரை 16-வது தாமிரபரணி பாசன பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


நெல்லை, 19 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்திலும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் குளத்திலும் கருந்தலை அன்றில் பறவையும், நத்தை கொத்தி தின்னும் நாரையும், நீருக்குள் மூழ்கி மீன் பிடிக்கும் நீர்க்காகமும், சாம்பல் நிற நாரையும், வக்கா பறவையினமும் ஒன்றுகூடி குடும்பம் நடத்தி குஞ்சு பொறிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர்குளத்தில் வட ஐரோப்பாவிலிருந்து விதவிதமான நாமத்தலை வாத்துகள் ஆயிரக்கணக்கில் வந்து அணிவகுத்துள்ளன.

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள பாதுகாப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கைக் கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் எல்லாம் கைகோர்த்து 16-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணியை வரும் 23-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தாமிரபரணி பாசன பூமியான தென் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இந்த வளமான பகுதியில், காடுகளில் மட்டுமல்லாமல் ஊருக்குள்ளும் எண்ணற்ற உயிரினங்கள் நிறைந்துள்ளன.

இந்த மாவட்டங்களின் குளங்கள் எல்லாம் நீர்ப்பறவைகளின் நிரந்தர புகலிடமாக ஜொலிக்கின்றன. இங்கு சுமார் 100 வகையான நீர்ப்பறவைகளை நாம் பார்க்கலாம்.

அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக 30-க்கும் மேற்பட்ட வகைகள் உலகின் பல திசைகளில் இருந்து உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் என்பது ஒரு சிறப்பம்சம்.

16-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 23-ம் தேதி விமரிசையாக தொடங்குகிறது. இதில் ஆர்வமுடன் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு அன்றைய தினம் 3 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.

நெல்லை மாவட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் மதியம் 2.30 மணிக்கும், தூத்துக்குடி மாவட்ட தன்னார்வலர்களுக்கு சாயர்புரம் போப் கல்லூரியில் மதியம் 2.30 மணிக்கும், தென்காசி மாவட்ட தன்னார்வலர்களுக்கு ஆய்குடி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 11 மணிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

18 வயது பூர்த்தியான அனைவரும் இந்த கணக்கெடுப்பில் தாராளமாக பங்கேற்கலாம். இணையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM