Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 19 ஜனவரி (ஹி.ச.)
ஏப்ரல் மாதத்தில் திருப்பதி ஏழுமலையப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக, பல்வேறு விதமான சேவை டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியாக உள்ளது.
இது தொடர்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் மாதத்திற்கான ஆர்ஜித சேவையான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட டிக்கெட்டுகள் இன்று (19ம் தேதி) காலை 10 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும். இந்த சிறப்பு டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள், ஜனவரி 21ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம். குலுக்கலில் தேர்வான அதிர்ஷ்டசாலிகள், ஜனவரி 21 முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் போன்ற சேவைகளுக்கான டிக்கெட்டுகள் எதிர்வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும். அதே நாளில், இந்த சேவைகளில் நேரடியாக பங்கேற்க முடியாத பக்தர்களுக்காக, தரிசன டிக்கெட்டுகள் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் கிடைக்கும். அங்கபிரதட்சனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டோக்கன்கள் 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
வயதான பெரியவர்கள், உடல் ஊனமுற்றோர், மற்றும் நீண்டகால நோய்களால் அவதிப்படுபவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய, இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ரூ.300 கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை 24ம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் பெறலாம். திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான அறைகள் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் பரக்காமணி உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கான சேவைக்கு 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே, பக்தர்கள் இந்த சேவைகளையும், தரிசன டிக்கெட்டுகளையும் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM