Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் அவர்கள், இன்றைய தினம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேன்மை தங்கிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நாளை (ஜனவரி 19) இந்தியாவிற்கு வருகை தருகிறார். பிரதமர் மோடியின் அன்பான அழைப்பை ஏற்று அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் காலித் பின் முகமது பின் சவீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
அவரை தொடர்ந்து 2025 ஏப்ரல் மாதத்தில் யுஏஇ துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். இவர்கள் வருகையின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட உறுதியான நட்புறவின் அஸ்திவாரத்தின் மீது, யுஏஇ அதிபரின் தற்போதைய பயணம் அமைந்துள்ளது.
இந்தியாவும், யுஏஇயும் வலிமையான பொருளாதார பிணைப்புகளை கொண்டுள்ளன. ஆழமான மற்றும் பலதரப்பட்ட உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகள் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாக, இரு தேசங்களும் மேம்படுத்தப்பட்ட சிறந்த வணிக மற்றும் முதலீட்டு பங்காளியாக திகழ்வதுடன், வலுவான எரிசக்தி உறவையும் பேணி வருகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM