Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
இந்திய தேசம் முழுவதும் மாநிலத்துக்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வகையிலும் இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
அந்த ரெயில்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்களை உருவாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தன. பிறகு, அந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
இதன் விளைவாக இந்த ரெயில்களை இயக்குவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டியது. முதலாவதாக மேற்கு வங்காளத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி (காமாக்யா) இடையே ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து அசாமின் கவுகாத்திக்கு இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில் உணவு மற்றும் நொறுக்குத்தீனிகளை பயணிகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கவுகாத்தியில் புகழ்பெற்ற சொகுசு விடுதியான மேபேர் ஸ்பிரிங்வேலி ரிசார்ட் பெற்றுள்ளது.
இதற்காக இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துடன் (ஐ.ஆர்.சி.டி.சி) ஒப்பந்தம் செய்துள்ளது.
பாரம்பரிய வங்காளி மற்றும் அசாம் உணவு வகைகளையும், சிற்றுண்டிகளையும் தேர்ந்தெடுத்து சுவைமிக்கதாகவும், தரமானதாகவும் பயணிகளுக்கு உயர்தரத்தில் வழங்க இந்த ஓட்டல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உணவுப் பட்டியலில் பசந்தி புலாவ், சோலார் மற்றும் மூங் பருப்பு, சணார் மற்றும் தோகர் உணவு வகைகள், அசாமின் ஜோஹா அரிசி, மதி மொஹோர் மற்றும் மசூர் பருப்பு, காலத்துக்கு ஏற்ற காய்கறி பொரியல்கள், அதோடு சந்தேஷ், தேங்காய் பர்பி, ரசகுல்லா போன்ற அந்தந்தப் பகுதிக்கே உரிய இனிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM