Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 19 ஜனவரி (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான கோதண்டராமன்(61) என்பவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இளைய மகளான சுமலதாவிற்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுமலதா நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கணவரை பிரிந்து கண்டமங்கலத்தில் உள்ள தனது தந்தையான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் வீட்டிற்கு தனது இரண்டு வயது பெண் குழுந்தையுடன் வந்து சுமலதா தங்கியிருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நுரையீரல் பாதிப்பிற்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று தனது மகள் சுமலதாவிற்கு கோதண்டராமன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இருந்தபோதிலும் நுரையீரல் பாதிப்பு சரியாகாமல் தனது மகள் சுமலதாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருவதைக் கண்டு மனமுடைந்த நிலையில் கோதண்டராமன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து தனது மகள் சுமலதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தனது கழுத்து மற்றும் கைகளை அறுத்து கொண்டு ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து தகவலறிந்ததும் கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த காயங்களுடன் இருந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சுமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுரையீரல் பாதிப்பால் அவதிக்குள்ளாகி வந்த மகளை கழுத்தறுத்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN