பொங்கல் விடுமுறையில் கோவை செம்மொழி பூங்காவை 1 லட்சம் மக்கள் கண்டு மகிழ்ந்தனர் - மாநகராட்சி தகவல்
கோவை, 19 ஜனவரி (ஹி.ச.) கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 25-ம் தேதி திறந்து வைத்தார். பூங்காவில்
பொங்கல் விடுமுறையில் கோவை செம்மொழி பூங்காவை 1 லட்சம் மக்கள் கண்டு மகிழ்ந்தனர் - மாநகராட்சி தகவல்


கோவை, 19 ஜனவரி (ஹி.ச.)

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 25-ம் தேதி திறந்து வைத்தார்.

பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபயிற்சி செய்வோருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றுக்கு) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது.

தற்போது செம்மொழி பூங்கா ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை நாட்களான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று 23,819 நபர்களும், 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று 31,744 நபர்களும், 17.01.2026 (சனிக்கிழமை) அன்று 25,848 நபர்களும் மற்றும் பொது விடுமுறை நாளான 18.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 18,743 நபர்களும்,

ஆகிய 4 நாட்களில் மொத்தம் 1,00,154 எண்ணிக்கையிலான ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b