Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன.
இதை பார்த்து ரசிக்க ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
2026-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முதல் கட்டமாக சால்வியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டமன் போன்ற மலர்ச்செடிகளை நடும் பணி டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
சில தினங்களாக பளிச்சிடும் வெயில் நீடித்துப் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் பகலில் 24 டிகிரி செல்சியஸூம், இரவில் 7 டிகிரி செல்சியஸூம் வெப்பநிலை பதிவாகிறது. மதியம் 3:00 மணிக்கு துவங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10:00 மணி வரை நீடிக்கிறது.
இத்தருணத்தில் மலர் செடிகள் கருகும் அபாயத்தை தவிர்க்க, பூங்கா நிர்வாக ஊழியர்கள் செடிகளுக்கு நிழல் வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வையை போர்த்தி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நடைமுறை பனிக்காலம் முடியும் வரை தொடரும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b