Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கம் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள குளத்தின் உள்ளே தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு சொந்தமான 7 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பொதுமக்கள் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறி கயத்தாறு தாலுகா அலுவலகத்தை சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த பெண்களும் ஆண்களும் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து தாசில்தார் அப்பனராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உயர் மின் கோபுரத்தை அகற்றும் வரை ஓய மாட்டோம் என்று பொதுமக்கள் ஒரே முடிவாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Hindusthan Samachar / vidya.b