Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 ஜனவரி (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நிலவி வரும் இருதரப்பு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் போட்டியை கிராம கமிட்டி ஊர் மக்கள் குழு சார்பில் நடத்த வேண்டும் என்றும் மற்றொரு தரப்பான தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோம் என இரு தரப்பினரும் மோதி வந்தனர் .
கிராம கமிட்டி தரப்பினர் தொடர்ந்து தாங்கள் நடத்த வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பாகச் செயல்பட்டு வரும் கிராம கமிட்டி வழக்கறிஞரைத் தீர்த்துக்கட்டச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை யார் நடத்துவது என்பதில் கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கம் தரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை அரசு சார்பில் முன்னின்று நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டும் 2026 ஜல்லிக்கட்டு போட்டியைத் தங்களது கிராமக் குழுவின் கட்டுப்பாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், அந்தத் தரப்பிற்காக நீதிமன்றத்திலும் காவல்துறையிலும் சட்ட ரீதியாகப் பணியாற்றி வரும் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கறிஞரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சதித் திட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி வழக்கறிஞர் அன்பரசன் கூறுகையில்:
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆலோசனை குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த விழாவினை நடத்திக் கொண்டிருக்கிறோம் கடந்த 2021 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் விழாவினை உரிமை கோரி முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் அந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி தான் தாக்கல் செய்ய வேண்டுமென எடுத்துரைத்து மனுவை தள்ளுபடி செய்தார்கள்.
அந்த உத்தரவின் முடிவை வைத்து அவனியாபுரம் பொது கமிட்டி சார்பாக உயர் நீதிமன்றத்தில் கிராம பொதுமக்கள் அடங்கிய கமிட்டிக்கு அனுமதி கோரி இந்த வழக்கு எங்களுக்கு உயர் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற வேண்டுமென தாக்கல் செய்துள்ளோம்.
இதனை சீர்குலைக்கும் நோக்கத்துடன் கடந்த 30-12-2025 ஆம் தேதி மதுரை மேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த விசாரணையை சீர்குலைக்கும் வகையில் அந்த தனி நபர் ஏ கே கண்ணன் என்பவரும் அவர்களுடைய வகையறாக்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 70 நபர்கள் அந்த ஆர்டிஓ மீட்டிங்கை நடக்கவிடாமல் செய்து நான் மற்றும் என்னுடன் வந்த முருகன், சுப்ரமணியன் மற்றும் சிற்றரசு ஆகியோரை மட்டும் உள்ளே அனுமதித்து விட்டு,
எதிர் தரப்பினர் கிட்டத்தட்ட 25க்கு பேருக்கு மேல் கூட்டம் நடக்க விடாமல் சீர்குலைத்து விட்டார்கள் கூட்டம் முடிந்து வெளியே வரும்போது உத்தரவை வைத்து அனுமதி வாங்கி விடுவோம் என்பதற்காக என்னையும் என் கூட இருக்கும் சுப்பிரமணியையும் தாக்க முயற்சி செய்தார்கள்.
அதற்காக நாங்கள் மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றோம்.
தந்தை பெரியார் நகரை சேர்ந்த பிரபு என்கிற பாட்ஷா என்பவரை தூண்டிவிட்டு என்னை கொலை செய்ய வரும் 5.1.2026 ஆம் தேதி எனக்கு தேதி குறிப்பிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில் அவனியாபுரம் காவல்நிலத்தில் புகார் கொடுக்க வந்துள்ளேன்.
எனக்கு பாதுகாப்பு கேட்டும் என்னுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டும் வந்திருக்கிறேன் என வழக்கறிஞர் அன்புரசு கூறினார் .
Hindusthan Samachar / Durai.J