Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 02 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(54). வழக்கறிஞரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரு இடம் தொடர்பாக தமிழ்ச்சாலை ரோட்டில் அமைந்துள்ள பிரபல புக் சென்டர் வைத்து நடத்தி வருபவரும், திமுக பிரமுகருமான வெற்றிவேல் என்பவரது மகன் சரவணனிடம் (44) ரூ.20 லட்சம் பணத்தை உலகநாதன் வாங்கியுள்ளார்.
ஆனால், அந்த இடம் கிரையம் ஆகாததால் உலகநாதன் சரவணனிடம் ரூ.6 லட்சத்தை ரொக்கமாகவும், 2 காசோலைகளும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது, போதுமான பணம் இல்லாத காரணத்தால் அது மதிப்பிழந்த காசோலையாக மாறியுள்ளது. இதனால் கோபமடைந்த சரவணன் உலகநாதன் மீது காசோலை மோசடி வழக்கைத் தொடுத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் உலகநாதனின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த காரையும் பறித்துள்ளார். ஆனால், அந்த வாகனத்துக்கு EMI கட்டாத காரணத்தால், சரவணனிடமிருந்த காரை வங்கியினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் உலகநாதனுக்கு சரவணன் மீதான கோபம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.31) தனசேகரன் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்த உலகநாதனை, அங்கு வந்த சரவணன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன்(41) இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து, அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்களுடன் ரஸ்னா மாரியப்பன் என்பவரும் சேர்ந்து கொண்டு, “அந்த சொகுசு காருக்கு உடனடியாக EMI பணத்தை கட்ட வேண்டும், இல்லையென்றால் உன்னைக் கொலை செய்து விடுவோம்” என மிரட்டியுள்ளனர். மேலும், உலகநாதனின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட சரவணன், தமக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக தரும்படி மிரட்டியுள்ளார்.
இதனால் செய்வதறியாது தவித்த உலகநாதனின் குடும்பத்தார் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி நேற்று உலகநாதனைக் கடத்தி சென்ற அந்த காரை மறித்த போலீசார் சரவணன், பாலமுருகன், கார் ஓட்டுநரான ஜெராஜ்(38) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
பிறகு அவர்களை கைது செய்த போலீசார், பிஎன்எஸ் (Bharatiya Nyaya Sanhita) சட்டம் 296(b), 115(2), 140(3), 351(3) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN