Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 ஜனவரி (ஹி.ச.)
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசாக நாடு தழுவிய அளவில் 'விஓவைஃபை' (வாய்ஸ் ஓவர் வைஃபை) எனும் வைஃபை காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களிலும் தடையின்றி பேச முடியும். நமது ஊர்களில் மொபைல் சிக்னல் மிகக் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் போன் பேசுவது பெரும் சவாலாக இருக்கும். இந்த பிரச்சனைகளை பலரும் எதிர்கொண்டிருப்பீர்கள்.
இனி அந்த கவலை வேண்டாம். உங்கள் மொபைலில் சிக்னல் குறைவாக இருந்தாலும், வீட்டில் உள்ள வைபை வசதியைப் பயன்படுத்தி மிகத் தெளிவான குரலில் பேச இந்த விஓவைஃபை சேவை வழிவகை செய்கிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
அனைத்து வட்டங்களிலும்: இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.
* வைஃபை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த அழைப்புகளுக்கு பிஎஸ்என்எல் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிப்பதில்லை. இது முற்றிலும் இலவசம்.
* இதற்கு வாட்ஸ்அப் போன்ற செயலிகள் எதுவும் தேவையில்லை. உங்கள் போனில் உள்ள சாதாரண டயலர் மூலமே வழக்கம் போல் பேசலாம்.
* நீங்கள் வைஃபை காலில் பேசிக்கொண்டே வெளியே செல்லும்போது, சிக்னல் கிடைத்தால் தானாகவே மொபைல் நெட்வொர்க்கிற்கு மாறும் வசதியும் இதில் உள்ளது.
யாருக்கெல்லாம் இது பயன்?
பிஎஸ்என்எல் பாரத் பைபர் அல்லது ஏதேனும் ஒரு பிராட்பேண்ட் வைபை வசதி வைத்திருப்பவர்கள், தங்களது ஸ்மார்ட்போனில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக மொபைல் டவர் சரியாக இல்லாத மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த வசதியை செயல்படுத்துவது எப்படி?
* உங்கள் ஸ்மார்ட்போனில் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் செல்லவும்.
* அதில் 'சிம் கார்டு', 'மொபைல் நெட்வொர்க்ஸ்' அல்லது 'கனெக்சன்ஸ்' தேர்வுக்குச் செல்லவும்.
* அங்கே 'வைஃபை காலிங்' என்ற விருப்பத்தை எனேபிள் செய்யவும்.
பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் உதவி மையம் 18001503 -ஐ தொடர்பு கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பத்திற்குத் தன்னை மாற்றிக்கொண்டு வரும் பிஎஸ்என்எல்-ன் இந்த அதிரடி முடிவு, தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியமுக்கிய தகவல்கள்
* உங்களிடம் பிஎஸ்என்எல் பாரத் பைபர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எந்தவொரு நிறுவனத்தின் வைஃபை மூலமும் பிஎஸ்என்எல்-ன் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
* இதற்குப் பணம் செலுத்த வேண்டுமா என்றால் இல்லை. இதற்குத் தனியாக எந்தக் கட்டணமும் கிடையாது. உங்கள் தற்போதைய ரீசார்ஜ் பிளான்படியே அழைப்புகள் கணக்கிடப்படும். சிக்னல் இல்லாத இடத்தில் பேச இது ஒரு கூடுதல் வசதி மட்டுமே.
* போன் பேசிக் கொண்டிருக்கும்போது வைஃபை கட் ஆனால் என்னாகும் என்ற கவலை வேண்டாம். உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் மொபைல் சிக்னல் இருந்தால், கால் கட் ஆகாமல் தானாகவே வைஃபை காலில் இருந்து மொபைல் நெட்வொர்க்கிற்கு மாறிவிடும்.
* இந்த வசதி செயல்பட உங்கள் போன் 'விஓவைஃபை' தொழில்நுட்பத்தை ஆதரிக்க வேண்டும். கடந்த 3-4 ஆண்டுகளில் வெளிவந்த அநேகமான 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM