ஏழைகள் இறக்கும் போதெல்லாம், மோடி எப்போதும் போல அமைதியாக இருக்கிறார் - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்
புதுடெல்லி, 02 ஜனவரி (ஹி.ச.) மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த நகராட்சி குடிநீர் விநியோகக் குழாயில் இருந்து வந்த தண்ணீரை அருந்தியதால், 2,800-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கடுமையான குடல் அழற்சி நோயால
ஏழைகள் இறக்கும் போதெல்லாம், மோடி எப்போதும் போல அமைதியாக இருக்கிறார் - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்


புதுடெல்லி, 02 ஜனவரி (ஹி.ச.)

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த நகராட்சி குடிநீர் விநியோகக் குழாயில் இருந்து வந்த தண்ணீரை அருந்தியதால், 2,800-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கடுமையான குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 270-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதக் குழந்தை மற்றும் பல பெண்கள் உட்பட இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஜனவரி 02) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

இந்தூரில் தண்ணீர் இல்லை, விஷம் விநியோகிக்கப்பட்டது. இதனை கண்டுகொள்ளாமல் நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு வீடும் துக்கத்தால் நிரம்பியுள்ளது, ஏழைகள் உதவியற்றவர்கள் - அதற்கு மேல், பாஜக தலைவர்கள் ஆணவமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அடுப்புகள் அணைந்து போனவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கம் ஆணவத்தை வழங்கியது.

அழுக்கு, துர்நாற்றம் வீசும் நீர் குறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தனர் - ஆனாலும் அவர்களின் புகார்கள் ஏன் கேட்கப்படவில்லை?

குடிநீரில் கழிவுநீர் எவ்வாறு கலந்தது?

சரியான நேரத்தில் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை?

பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

இவை அற்பமான கேள்விகள் அல்ல - அவை பொறுப்புக்கூறலைக் கோருகின்றன. சுத்தமான நீர் ஒரு சலுகை அல்ல, அது வாழ்வதற்கான உரிமை. மேலும் பாஜகவின் இரட்டை இயந்திரம், அதன் அலட்சிய நிர்வாகம் மற்றும் உணர்வற்ற தலைமை ஆகியயே சுத்தமான நீர் எனும் உரிமையை அழித்ததற்கு காரணமாகின்றன.

மத்தியப் பிரதேசம் இப்போது தவறான நிர்வாகத்தின் மையமாக மாறியுள்ளது - இருமல் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை கொல்லும் எலிகள், இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் மரணங்கள்.

ஏழைகள் இறக்கும் போதெல்லாம், மோடி எப்போதும் போல அமைதியாக இருக்கிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b