அரசு பேருந்து மீது, லாரி மோதிய விபத்தில், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி!
திண்டுக்கல், 02 ஜனவரி (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவு என்ற இடத்தில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்றது. அப்போது, பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செ
Accident


திண்டுக்கல், 02 ஜனவரி (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவு என்ற இடத்தில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்றது.

அப்போது, பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு, 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் இருந்த சுமார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. மேலும், இந்த விபத்தில் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நான்கு வழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனியில் சுமார் 100 அடி தூரத்திற்கு ஓடிச்சென்று நின்றது.

இதில் பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல் ராஜாராம், பரமக்குடி அலமேலு, செல்வி மற்றும் லாரி டிரைவர் திருச்சி அருகே வையம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (52) உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN