103 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 80 சவரன் நகைகள் மீட்பு
கோவை, 02 ஜனவரி (ஹி.ச.) கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 80 சவரன் தங்க நகைகளையும், கொள்ளைக்குப் பயன்படுத்தி
Gold Loot Case


கோவை, 02 ஜனவரி (ஹி.ச.)

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 80 சவரன் தங்க நகைகளையும், கொள்ளைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, குனியமுத்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெபா மார்ட்டின் தனது உறவினர் வீட்டுத் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து 103 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கதவின் பூட்டை உடைக்காமல் கைவரிசை காட்டியது காவல்துறையினரையும் திகைக்க வைத்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 80 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

கண்காணிப்பு கேமரா இல்லாத இந்த வழக்கில், பூட்டை உடைக்காமல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரித்ததில், கடந்த 2024 ஆம் ஆண்டு குனியமுத்தூர் பகுதியிலும், 2023 ஆம் ஆண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்திலும் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தியின் தடயங்கள் ஒத்துப்போனது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை கண்ணப்பா நகர் பகுதியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN