Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 02 ஜனவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் கொட்டுகாரம்பட்டியில் இருந்து 23 பேரை ஏற்றிக்கொண்டு காலையில் தனியார் ஷூ கம்பெனி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை கல்லாவியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (51) ஓட்டினார்.
பேருந்து ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஏரியத் தொடங்கியதும், பேருந்து மீதும் தீ பரவியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
இதனையடுத்து பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி உயிர் தப்பினர். உடனே இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலாகின.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனம் அதிவேகத்தில் ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
அதிகாலையில் தினமும் ஊத்தங்கரை பகுதியில் பனிமூட்டம் நிலவுவதால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN