Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 ஜனவரி (ஹி.ச.)
குமர குருபர சுவாமிகள் தலைமையில்
கவுமார மடாலய முப்பெரும் விழா
ஜனவரி 6-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது.
இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் மற்றும் குரு மகாசந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற திங்கள்கிழமை ஜன. 5-ந் தேதியும், செவ்வாய்க்கிழமை 6-ந்தேதியும் 2 நாட்கள் நடக்கிறது.
5-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்புகழ் இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, நாட்டிய நாடகம், பெருஞ் சலங்கை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
6-ந்தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை வேள்வி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, அடியார்தமை அமுது செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு மடத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கே.குமாரசாமி வரவேற்று பேசுகிறார்.
விழாவில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல், ஐ.நா. சபை சிறப்பு தூதர் ராஜா பி.ஆறுமுகம், மலேசிய நாட்டை சேர்ந்த டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், லண்டனை சேர்ந்த சிவ.தம்பு. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணேஷ் குமார், வடவள்ளி திருப்புகழ் குழுவை சேர்ந்த வைத்தியநாதன் மற்றும் கௌமார மடாலயத்தை சேர்ந்த தவில்-நாதஸ்வர கலைஞர்களான கனகராஜ், கோவிந்தராஜ். மாணிக்கராஜ், கணேசன் ஆகியோர் விருது பெறுகிறார்கள்.
விழாவில் தவத்திரு. தண்டபாணி சுவாமிகளின்
5-க்கும் மேற்பட்ட நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது என இவ்வாறு தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J