Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 02 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், அடிக்கடி அந்த பகுதியில் மது அருந்தி விட்டு ஆபாச வார்த்தைகள் மற்றும் ஒருமையில் பேசி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலை நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு வீடு புகுந்து மாணவியிடம், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் காரல் மார்க்ஸ் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடிக்க முற்பட்ட போது அவர் தப்பியோடி ஓடி தலைமறைவானார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தப்பி ஓடி தலைமறைவான காரல் மார்க்ஸை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN