Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “சமத்துவ நடைபயணம்” என்கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று
(ஜனவரி 02) தொடங்கி, மதுரையில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்கிறார்.
இந்த நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் இன்று காலை தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கிவைப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளார்கள்.
வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி திடீரென புறக்கணித்துள்ளது. அழைப்பிதழின் முகப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் நடைபயண தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. புலிகள் இயக்கத் தலைவரின் படம் போட்டிருக்கும் விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரான செயலாக கருதப்படும்.
எனவே, நடைபயண துவக்க விழாவில் செல்வப் பெருந்தகை பங்கேற்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வைகோவின் நடைபயண துவக்க விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. .
Hindusthan Samachar / vidya.b