Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 02 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம், சித்திரை விஷு, புத்தாண்டு உள்பட பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகளவில் நடைபெறும். இந்த நிலையில் இவ்வருட புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி ஒரே நாளில் கேரளா முழுவதும் ரூ.125.64 கோடிக்கு மது வகைகள் விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 31ம் தேதி ரூ.108.71 கோடி மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த முறையை விட இம்முறை ரூ.16.93 கோடிக்கு கூடுதலாக விற்பனை நடைபெற்றுள்ளது.
கொச்சி கடவந்திரா பகுதியில் உள்ள கடையில் தான் டிசம்பர் 31ம் தேதி மிகவும் அதிகமாக ரூ.1.17 கோடிக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொச்சியின் ரவிபுரம் விற்பனை நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரவிபுரம் விற்பனை நிலையம் ரூ.95,08,670 விற்பனையைப் பதிவு செய்தது. மலப்புரத்தின் எடப்பலில் உள்ள குட்டிபாலா விற்பனை நிலையம் ரூ.82,86,090 விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த நிதியாண்டில் (2025-26) இதுவரை ரூ.15,717.88 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.14,765.09 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b