வைகோ சமத்துவ நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜனவரி 02) வைகோ சமத்துவ நடை பயணத்தை தொடங்கினார். திருச்சியில் இந்த நடை பயணத்தை முதல
வைகோ சமத்துவ நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று

(ஜனவரி 02) வைகோ சமத்துவ நடை பயணத்தை தொடங்கினார்.

திருச்சியில் இந்த நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயணம் வரும் ஜனவரி 12ம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது.

இந்த பயணத்தின் தொடக்க விழாவில் மதிமுக நிர்வாகிகள் அழைப்பை ஏற்று, விசிக, மநீம உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், ஐ.யூ.எம்.எல். தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

2026ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி வைகோவின் சமத்துவ நடை பயணம் தொடக்கவிழா நிகழ்ச்சி அமைந்து இருக்கிறது. இளைஞர்களுக்காகவும், எதிர்க்கால நலனுக்காகவும் பணியாற்றும் இயக்கம் திமுக. காலடி படாத இடமே இல்லாத இடம் என்ற அளவுக்கு மக்கள் பிரச்னைகளுக்கு நடை பயணம் மேற்கொண்டவர் வைகோ.

வைகோவின் நெஞ்சுரம், வேகத்தை பார்க்கும் போது அவருக்கு 82 வயதா? 28 வயதா? என எண்ணத் தோன்றுகிறது? போதை ஒழிப்பு, ஜாதி மத மோதல் தடுப்பு என்ற கருத்துகளோடு வைகோவின் நடை பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.

நடைபயணம் போது தான் மக்களிடம் சுலபமான முறையில் நேரடியாக தங்களது கருத்துகளை தெரிவிக்க முடியும். முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடை பயணத்தை வைகோ தொடங்கியுள்ளார். போதையின் பாதையில் சிக்கியவர்கள் பாதிப்பு அறிந்து விடுபட வேண்டும், உடன் இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும்.

போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். பெரும் நெட்வொர்க்கான போதையை ஒழிக்க மாநில அரசு, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். போதை கடத்தல் தடுக்கப்பட வேண்டும்.

மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கட்டுப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்.

நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து மாணவர்களை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதை தடுக்க வேண்டும். எல்லாரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.

மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள் கூட வெறுப்பு பேச்சை பேசுகின்றனர். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் அச்சத்தில் வாழும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் பங்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அன்பு செய்ய சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய சொல்லி தருகிறது. வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதை விட அவருடைய உடல்நலம் முக்கியம்.

உடல்நலம் கருதி இனி வரும் காலங்களில் இது போன்ற நடை பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b