Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 02 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வேனில் சென்றனர். இவர்கள் பயணம் செய்த வேன், தேனி அருகே சென்ற போது, பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்த ஐய்யப்ப பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த குமார் (55), ராம்கி (36) ஆகிய இரு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக மற்ற அனைவரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து சம்பந்தமாக, வேனை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் மேலபாடியூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த குமார் மற்றும் ராம்கி ஆவிகளின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ராம்கி, சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். உயரிழந்த குமார் என்பவர் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி கல்பனா தேவி, தேனி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பாத யாத்திரையாக சென்று வருவதால் அவர்களுக்கு ஒளிரும் பட்டை வடிவில் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், கவனக்குறைவாக செல்லும் ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் முறையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் எனவும் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஐயப்ப பக்தர்களை அழைத்து செல்லும் ஓட்டுநர்கள், நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார்களா? என்பதை கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஐயப்ப சீசன் என்பதால் ஓட்டுநர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுவே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே, சபரிமலைக்காக பாதையாக சென்ற இரு பக்தர்கள் மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN