Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு அணைத்து கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12-ம் தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரச்சார யாத்திரை நிறைவு விழா ஜனவரி 4 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஜனவரி 4-ம் தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
இதற்காக நத்தம் பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயண நிறைவு விழாவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமாகவும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள்
(ஜனவரி 5-ந்தேதி ) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பின்னர் திருச்சியில் நடைபெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.
1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b