மண் சரிவு காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி, 02 ஜனவரி (ஹி.ச.) உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, விடுமுறை நாட்களில்
மண் சரிவு காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து


நீலகிரி, 02 ஜனவரி (ஹி.ச.)

உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, விடுமுறை நாட்களில் காலை 9.10 மணிக்கும் ஒரு சிறப்பு மலை ரயிலும் இயக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த மலை ரயில், இன்று (ஜனவரி 02) காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட தயாராக இருந்தது.

ஆனால் ரயில் பயணம் செய்யும் பல்சக்கர இருப்புப் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டு, தண்டவாளத்தில் மண் சகதியும் கற்களும் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், மலை ரயில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அடர்லி மற்றும் ஷில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீராகியதும் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்குச் செல்ல முன்பணம் செலுத்திய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் விழுந்துள்ள மணல் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b