Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 20 ஜனவரி (ஹி.ச.)
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் தலைமையில், பா.ஜ.க, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மஹாயுதி என்ற கூட்டாட்சி அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் மும்பை உட்பட 298 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மஹாயுதி கூட்டணி அபார வெற்றி வாகை சூடியது.
காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியது. மும்பையை மஹாயுதி கூட்டணி கைப்பற்றிய போதிலும், மேயர் பதவி யாருக்கு என்பதில் பா.ஜ.க மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதாரா, சாங்லி, கோலாப்பூர், சோலாப்பூர், சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ், லாத்தூர், பர்பானி உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த மாதம் 5ஆம் தேதி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதோடு 125 பஞ்சாயத்து குழுக்களுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது.
மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்த காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட உள்ளது.
மஹாயுதி கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் துணை முதல்வர் அஜித் பவாருடன் சரத் பவார் கூட்டணி அமைத்த காரணத்தினால், காங்கிரஸ் கட்சி அவருடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
அதே சமயத்தில் உத்தவ் சிவசேனா, வஞ்சித் பகுஜன் ஆகாடி ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM