Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1 கோடி செலவில் ‘பசுமை முதன்மையாளர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் 2025ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழில்துறைகள் போன்றவற்றை கவுரவிக்க முன்மொழிந்துள்ளது.
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருது குழு மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்கு நிரப்ப வேண்டிய வடிவம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.qov.in) உள்ளது. 2025ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க கடைசி தேதி வரும் 28ம் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b