Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக, 2020 ஜனவரி மாதத்தில் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா நியமனம் செய்யப்பட்டார்.
பாரதீய ஜனதா கட்சியின் சட்ட திட்டங்களின்படி, ஒரு தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று வருடங்கள் ஆகும். 2023ஆம் ஆண்டில் நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும், 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தேசிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஒரு இளைய தலைவரை நியமிக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்திருக்கும் நிலையில், அக்கட்சியைச் சார்ந்த பீகார் மாநில சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நிதின் நபின் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையிட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மொத்தம் 37 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்து வேட்பு மனுக்களும் செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்து இருந்தன.
வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிட அலுவலகத்தில் இன்று நடைபெறவிருக்கும் விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறையாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மேலும், பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதால், தேசிய தலைவராக பொறுப்பேற்றவுடன், பீகார் மாநில அமைச்சர் பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM