Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 20 ஜனவரி (ஹி.ச.)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், மஹாராஷ்டிரா மாநில அரசாங்கமும் ஒன்றிணைந்து அஜந்தா - எல்லோரா உலக திரைப்பட விழாவை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றன.
அதில் கலைத்துறையில் தன்னிகரற்ற சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இந்த வருடம் நடக்கவிருக்கும் அஜந்தா - எல்லோரா உலக திரைப்பட விழா ஜனவரி 28-ல் ஆரம்பித்து பிப்ரவரி 4 வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவின் ஆரம்ப நாளான ஜனவரி 28-ல் ராஜ்யசபா எம்.பி-யும், இசை மேதையுமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்படும் என்று விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.
விருது பெறுபவருக்கு நினைவுச் சின்னம், பாராட்டு பத்திரம், மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இதற்கு முன்பு புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே, மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்ட ஜாம்பவான்கள் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM