Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 ஜனவரி (ஹி.ச)
உலக புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை விசேஷ நாட்களாகும்.
இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால் அதிகளவில் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
பழனி ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்போதும் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஜனவரி 21) நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b