குடியரசு தின அணிவகுப்பு - பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.) குடியரசு தின அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதைக்கு வருகை தரும் பார்வையாளர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை ''கூகுள் மேப்ஸ்'' மற்றும் ''மேப்பிள்ஸ்'' போன்ற அதிநவீன மொபைல் செயலிகள் மூலம் துல்லியமாக அறிந்து
குடியரசு தின அணிவகுப்பு - பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்


புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)

குடியரசு தின அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதைக்கு வருகை தரும் பார்வையாளர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை 'கூகுள் மேப்ஸ்' மற்றும் 'மேப்பிள்ஸ்' போன்ற அதிநவீன மொபைல் செயலிகள் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்று நகரக் காவல் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி மாநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்று தேசத் தலைநகர் டெல்லியில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, மனதை மயக்கும் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இந்த விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கூகுள் மேப்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் ஆகிய நவீன மொபைல் செயலிகள் மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

வாகனப் போக்குவரத்தை சீராக்கும் நோக்கில், போக்குவரத்து பிரிவு இந்த மொபைல் செயலிகளுடன் கைகோர்த்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

அழைப்பிதழ் வைத்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு உடையோர் கர்தவ்யா பாதைக்குச் செல்ல தங்களுக்குரிய வாகன நிறுத்துமிடத்தை இந்த இரண்டு செயலிகள் வாயிலாகவும் உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த நவீன வசதி குடியரசு தின விழாவோடு மட்டுமல்லாமல், ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் படைவீரர்கள் பாசறை திரும்பும் கண்கொள்ளாக் காட்சியின் போதும் கிடைக்கும். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

பார்வையாளர்களுக்கு உதவும் வகையில், வாகன நிறுத்துமிடம் தொடர்பான விளக்க வீடியோக்களையும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

மேலும் வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தியும் வாகன நிறுத்துமிடத்தை சுலபமாக அடையலாம். கர்தவ்ய பாதையைச் சுற்றி சுமார் 22 இடங்களில் 8,000 வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிட அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் அதில் அச்சிடப்பட்டுள்ள க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 77,000 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதில் 6,000 சீட்டுகள் வாகனங்களில் வருவோருக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM