Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 03 ஜனவரி (ஹி.ச.)
2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 285 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் நக்சலைட்டுகள் போலீசாரிடம் ஆயுதங்களுடன் சரண் அடையும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 03) அதிகாலை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் கோட்டா கிஷ்டாராம் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த அதிரடி பதிலடியில், 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களுடன் ஏகே-47 உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பகுதியில் இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும் இந்த நக்ஸல் ஆதிக்கம், இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக ஒழிக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b