Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினரின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,
தமிழகத்தில் அனைத்து தரப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணம் முழுவதும் அந்தந்த தொகுதிகளில் திமுக பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
வாக்காளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தும், பணம் கொடுத்தும் தில்லுமுல்லு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக பணிகளை செய்து வருவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆசிரியர்களும், தூய்மை பணியாளர்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் ஸ்டாலின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, மன்னர் பிடில் வாசித்துக் கொண்டு இருந்ததைப் போல ஆசிரியர்களின் போராட்டத்தை ஸ்டாலின் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ