Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 ஜனவரி (ஹி.ச.)
2 நாட்கள் பயணமாக நாளை திருச்சி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பொங்கல் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ’தமிழ்நாடு தலை நிமிர தமிழனின் சுற்றுப் பயணம்’ என்ற பிரச்சாரத்தை துவங்கி, மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகிறார்.
இந்த சுற்றுப் பயணம் நாளை புதுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அமித் ஷா, அந்தமான் நிக்கோபார் தீவில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 5.25 மணிக்கு புதுக்கோட்டை செல்கிறார்.
பின்னர் புதுக்கோட்டையில் ’தமிழ்நாடு தலை நிமிர தமிழனின் சுற்றுப்பயணம்’ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
அதன் பின் மாலை 6.55 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதிக்கு இரவு 7.50 மணிக்கு வருகை தருகிறார்.
அங்கு தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்டக் குழு மற்றும் மையக் குழுவைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை அமித் ஷா வழங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காலை ஜனவரி 5 ஆம் தேதி, 9.50 மணிக்கு தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் இருந்து புறப்பட்டு சரியாக 10 மணிக்கு ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பின் பிற்பகல் சரியாக 12 மணியளவில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், தமிழ்நாட்டின் கலாச்சார பண்டிகையாக விளங்கும் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதில், 2,000 பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு துறைக்கு சொந்தமான BSF விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
Hindusthan Samachar / ANANDHAN