Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஜனவரி (ஹி.ச.)
பிரசவ வார்டில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் திசம்பர் 31-ஆம் தேதி மது விருந்துடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும், அந்த நேரத்தில் நோயர்களுக்கு மருத்துவம் அளிக்க மருத்துவர்களோ, பிற பணியாளர்களோ இல்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
போதையை ஒழிப்பதற்கான அரசு மருத்துவமனைகளை போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமான ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால், நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான். திமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும்.
மருத்துவமனையின் பிரசவ வார்டில் வைத்து மது அருந்தியவர்கள் யார்? அரசு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக கண்காணிப்புக் காமிராக்கள் செயல்படாமல் பழுதடைந்து கிடந்தது ஏன்? அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு இல்லாதது ஏன்? என்பதற்கான விடை அரசிடம் இல்லை. ஆனால், அங்கு பணியிலிருந்த 4 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதன் மூலம் அனைத்துத் தவறுகளையும் அவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்க திமுக அரசு முயல்கிறது. இத்தகைய சீர்கேடுகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து தெருக்களிலும் மதுக்கடைகள் நிறைந்திருப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதும் தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் ஆகும். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். அது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam