Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 03 ஜனவரி (ஹி.ச.)
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று (ஜனவரி 03) நடைபெற்று வருகின்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெறுகிறது.
திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது. வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை வணங்கினார். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜா் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (ஜனவரி 02) தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று (ஜனவரி 03) அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளது.
நாளை (ஜனவரி 04) இரவு பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. ஜனவரி 5ஆம் தேதி ஞானப்பிரகாசா் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b