மூட நம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் அரசு அதிகாரிகள் பணிந்து போகக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர், தனது வீட்டில், சிவசக்தி தக்‌ஷீஸ்வரி, விநாயகர், வீரபத்திரன் சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தார். பூஜைகளில் அண்டை வீட்டாரும்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர், தனது வீட்டில், சிவசக்தி தக்‌ஷீஸ்வரி, விநாயகர், வீரபத்திரன் சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தார்.

பூஜைகளில் அண்டை வீட்டாரும் பங்கேற்று வந்துள்ளனர்.

சிலைகள் வைத்து வழிபாடு நடத்திய பிறகு, அப்பகுதிகளில் மர்மமான முறையில் சிலர் மரணமடைந்துள்ளதாகக் கூறி, உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிலைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலைகளை திரும்ப ஒப்படைக்கும்படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது எனவும், மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது எனவும், 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள் இதுவரை சிலைகளை ஒப்படைக்கவில்லை எனக் கூறி, கார்த்திக் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, திருவொற்றியூர் தாலுகா தாசில்தாரர் அலுவலகத்துக்கு சென்று சிலைகளை பெற்றுக் கொள்ளும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சிலைகளை மனுதாரர் பெற்றுக் கொண்டதை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், மனுதாரர் வீட்டில் அனுமதியின்றி கோவில் கட்டியிருந்தால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, உண்டியல் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் தனது சொந்த இடத்தில் சிலைகள் வைத்து அமைதியாக வழிபாடு நடத்தினால், அதற்கு எதிராக பெரும்பான்மை என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க முடியாது எனவும், அரசு அதிகாரிகள், மூடநம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் பணிந்து செல்லக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கடவுளோ, சிலைகளோ மனித இனத்துக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை எனவும், அதுபோன்ற நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் என்றும் அதை பக்தி என்று கருத முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ