த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - காங்கிரஸ் திட்டவட்டம்
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) சென்னை சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசி அவர் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் சுமூகமா
கிரிஷ் ஜோடங்கர்


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

சென்னை சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசி அவர் தெரிவித்ததாவது,

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தேர்தல் நேரங்களில் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சாரப் பணிகளுக்குப் போதிய கால அவகாசம் தேவை என்பதை மட்டுமே சுட்டிக்காட்டினோம்.

ஏனெனில், பல மாநிலங்களில் கடைசிநேரப் பேச்சுவார்த்தைகளால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளோம். அதனால், இம்முறை முன்கூட்டியே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன், காங்கிரஸ் டெல்லி தலைமையும் பேசி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பூத் அளவில் வலிமைப்படுத்தி வருகிறோம்.

கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த புகாரின் அடிப்படையில், மாவட்டத் தலைவர் சதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அகில இந்தியத் தலைமை நியமித்த நிர்வாகி மீது மாநிலத் தலைமை தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. விதிமுறைகளின்படி விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜய்யின் த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கத் திட்டமிடுவதாக வெளியான தகவல் உண்மையில்லை. தி.மு.க.வுடன் நீண்ட கால மற்றும் நம்பிக்கையான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. கடந்த மாதம் முதல்வரைச் சந்தித்தோம்; எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் யாரோ ஒருவர் (பிரவீன் சக்கரவர்த்தி) பேசியதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணித்தது சரியான முடிவு. அவர்களின் அழைப்பிதழில் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் இடம்பெற்றதுதான் புறக்கணிப்புக்குக் காரணம் என்றார்.

பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரத்தை வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சியாவது சொல்வார்களா? அப்படிச் சொன்னால் அது என்.ஜி.ஓ. ஆகிவிடும் என்றார். மேலும், 38 இடங்கள் மற்றும் 3 அமைச்சர்கள் பதவி கேட்பதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி உண்மை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ