23 ஆண்டு கால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் !
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Ta
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு - வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக  ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 03) ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.

தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு இனிப்பு வழங்கி, அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

23 ஆண்டு கால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் எதிர்பார்த்தது போன்று வழங்கியமைக்கு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

முதலமைச்சரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ அமைப்பு பெருமகிழ்வோடு வரவேற்று நன்றி தெரிவிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.

மேலும் ஜனவரி 6-ந்தேதி முதல் நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b