புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடக்கம்
புதுக்கோட்டை, 03 ஜனவரி (ஹி.ச.) தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலைக் கொண்ட புதுக்கோட்டையில் ஆண்டுதோறும்
புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடக்கம்


புதுக்கோட்டை, 03 ஜனவரி (ஹி.ச.)

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலைக் கொண்ட புதுக்கோட்டையில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 3 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கியிருந்தனர்.

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 3 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

நேற்று முன்தினம் மதியம் மூன்று மணி முதல் டோக்கன்கள் விநியோக்கப்பட்ட நிலையில், திருச்சி, மதுரை, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாடுபிடிவீரர்கள் புகைப்படம், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு ஆர்வத்துடன் முண்டியடித்துக் கொண்டு டோக்கன்களை பெற முற்பட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வருவாய் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் வர அறிவுறுத்தி அவர்களை வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவருக்காக டோக்கன்கள் விநியோகிக்கபட்டது.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடங்கும் முன் இன்று காலையில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதியானவர்கள் மட்டும் களத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு தொடங்கிய உடன் வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வீரர்களை வரிசையில் அனுப்புவதில் குழப்பம் மற்றும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள் வாடிவாசலுக்கு செல்லும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மாடுபிடி வீரர்களில் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களும் உள்ளனர், நேரடியாக டோக்கன் பெற்றவர்களும் உள்ளனர். இதில் யாரை முன்கூட்டியே அனுப்பலாம் என்பதில்தான் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்று முதல் 50 வரையிலான நேரடி டோக்கன் பெற்றவர்களை முதலில் அனுப்பாமல், 150இல் இருந்து 200 வரையிலான எண் கொண்ட டோக்கன் பெற்றவர்களை அனுப்புகிறார்கள் என சில மாடுபிடி வீரர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

அவர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்களை விரட்டியடித்து, அங்கு வரிசையாக முறைப்படி வீரர்களை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b