Enter your Email Address to subscribe to our newsletters

பிரயாக்ராஜ், 03 ஜனவரி (ஹி.ச.)
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுக்கொருமுறை நிகழும் மகா மேளா இன்று
(ஜனவரி 03) தொடங்கியது.
பெளஷ் பௌர்ணமி (பௌஷ் பூர்ணிமா) ஒரு மாதக் கால கல்பவாசம் இன்று முதல் தொடங்கியது. பிரயாக்ராஜில் இன்று புனித நீராடுவதால் மக்களின் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
கல்பவாசத்தின்போது பக்தர்கள் தினமும் இரண்டு முறை கங்கை நதியில் புனித நீராடுவார்கள். ஒருவேளை மட்டும் உணவு உண்டு, மீதி நேரத்தைத் தியானம் செய்வதிலும், தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதிலும் செலவிடுவார்கள்.
அந்த வகையில், பவுர்ணமி தினமான இன்று (ஜனவரி 03) பிரயாக்ராஜில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் பத்து நீராடும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்பது மிதவைப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
கல்பவாசிகளும், பக்தர்களும் புனித நீராடுவதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மகாமேளா குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
கங்கை அன்னைக்கு வணக்கம்! புனித யாத்திரைத் தலங்களின் அரசனான பிரயாக்ராஜுக்கு, புனித சங்கமத்தில் நீராடுவதற்காக வருகை தந்துள்ள அனைத்து மரியாதைக்குரிய துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும்.
கங்கை அன்னை,யமுனை அன்னை மற்றும் சரஸ்வதி அன்னை அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றட்டும்.
இதுவே எங்கள் பிரார்த்தனை.
இவ்வாறு ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b