Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 03 ஜனவரி (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளிலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமூக்கு பகுதிகளில் ஜனவரி 01 ஆம் தேதி நள்ளிரவு முதல் நேற்று (ஜனவரி 02) காலை வரை தொடர் கனமழை பெய்தது. மேலும், தென்காசி மாவட்டத்தின் நீா்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை கொட்டித்தீா்த்தது.
இதனால், கடனாநதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. குறிப்பாக கடனா அணைக்கட்டிற்கு வரும் நீர்வரத்து உயர்ந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணைக்கட்டுகளில் இருந்து சுமார் 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி மாநகரின் கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் மக்கள் வழக்கமாக குளிக்கும் படித்துறைகள், பாறைகள் நீரில் மூழ்கின.
குறிப்பாக, மாவட்டத்தின் பழமையான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் கோயிலில் இருந்த சுவாமி உற்சவா் சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள், உடமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மண்டபத்திற்கு கோயில் பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கனமழை மழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b