Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜனவரி (ஹி.ச)
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கமான ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பின் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வரும் ஜனவரி 6ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பிடன் தமிழக அமைச்சர்கள் நேற்று (02-01-26) பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளின் இன்று (ஜனவரி 03) அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 03) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.
திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b