ஓய்வூதிய நிதியத்திற்குத்தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 6ம் தேதி முதல், காலவரையற்ற வே
தமிழ்நாடு அரசு


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச)

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வரும் 6ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் அறிவித்தன.

அதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று தலைமை செயலகத்தில் உள்ள தன் அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.

இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து ஓய்வூதிய திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam